Monday 19 June 2017



என்னில் ஏனோ மிதக்கிறாய்..
அதனால் தானோ..??!!
என்னை நீ மிதிக்கிறாய்..!!!

எங்கள் தந்தையின் மனைவி...!!!

கோயில் பிரசாதமாய் குங்குமமும் பூவும் இனி என் அம்மாக்கு நான் எப்படி குடுப்பேன்,
அவள் வெள்ளை உடை அணியும்பொழுது...!!!
மஞ்சள் இல்லாத அன்னையின் முகம்.. 
என் தந்தை இல்லாத இந்த வீடு...
காற்றைடைத்த பையாய் இந்த மனித உருவம்.. வெடித்து சிதறும் தருணம்.. 
உறவினருகளின் அழுகை.. நண்பர்களின் தனிமை..
பிள்ளைகளுக்கு வெறுமை.. மனைவிக்கு அது தான் கொடுமை...!
என் கண் முன்னே என் தாயின் கொடுமை இது..
தடுப்பார் யாரும் இல்லை.. பொறுப்பதற்கு மனமும் இல்லை...
தாயின் கையிலே தவழ்ந்த நாட்களை விட.. என் தாய் என் கையிலே அடைந்து கதறிய காட்சி என் நெஞ்சுக்குழியில் புதைந்து நிற்கின்றது...
கட்டுண்ட சேலை இனி இல்லை அவளுக்கு கட்டினவன் கொல்லையிலே சென்றதால்...
சத்தமின்றி அழுகின்றாள் தன் கோலத்தை எண்ணி...
அது அவளுக்காக அல்ல... என் தந்தை ரசித்த பூவும் பொட்டும் கூட இன்று தன்னிடம் இல்லையே என்று...
பூமியை பார்த்து வாழ்ந்த அவள் கண்கள்..
இன்று வானம் பார்த்து வாழ்கின்றது என் தந்தையை தேடி...
கை வலை கொஞ்சிட அன்னமிட்டவள் 
என் இதயம் கெஞ்சிட 
அறியாமல் மௌனமாய் நிற்கிறாள் வெறும் ஜடமாய்...
கன்னம் சிவந்திட சிறிதவள்
கண்களின் வலி தெரியாமல் அழுகிறாள்...
காதல் கொண்ட மனதில் கூடவே காத்திருப்பையும் வைத்து இருக்கிறாள்...

அவள் மரணத்தை நோக்கி...!!!

இந்த பிள்ளைகளின் உள்ளம் காத்திருப்பையும் மீறி கதறுகிறது
இது எங்கள் அன்னை இல்லை,

எங்கள் தந்தையின் மனைவி...!!!


இடைவெளி இல்லா பயணம் 
  அவளுடையது என் மனதில்...!!!


கண்ணீர் சிந்தும் கண்களை விட
கவலைகளை சுமக்கும் கண்கள் அதிகம்...

அதில் கண்ணீர் தெரியாது...!!!


விட்டுச் சென்ற முத்துக்கள் உன் பிள்ளைகள்
எதனைக் கொட்டி கொடுத்தாலும் நீர் வருவீரோ..???
தந்தையே..!!
வெள்ளை மனம் கொண்ட உமது கருப்பு நிழல்கள்
என்னை வாட்டுகிறது...
நீர் இருக்கும் நேரத்தில் நான் உமது பக்கத்தில் இல்லை..
நான் உம்மை நினைக்கும் நாளில் நீர் என் பக்கத்தில் இல்லையே...!!
அய்யா...
மக்களுக்கு நீர் என்றும் தலைவனாய் இருக்கின்றீர்..
நீர் பெற்று எடுத்த மக்களுக்கு தந்தையாய் வரமாட்டீரோ ஒரு முறை...!!
அள்ளி முடிந்த கூந்தல் முடி காத்து கிடக்கின்றது என் அன்னைக்கு..
கொண்டு வரமாட்டாயோ ஒரு முழம் பூ...???
வெட்டி எறிந்த சொந்தங்களும் இன்று ரெக்கை முளைத்து வந்தனவே..
நீர் விட்டு சென்ற எங்களைக் காண ஒரு முறை வரமாட்டாயோ..???
விட்டுச் சென்ற உன் பெயர் எங்களை வாழ வைக்கிறது 
அய்யா...
நீர் குடுத்துச் சென்ற இந்த உதிரம் மட்டும் எங்களைச் சுட்டுப் பொசுக்குகிறது...!!!

கனவில் வந்த நீர் மீண்டும் பிறக்கும் கருவறை எது..!!!???


கட்டிப் பிடித்து வந்த
மழையைக் காட்டிலும் 
தள்ளி விழுந்த தூறல் இன்னும் அழகு...!
தோழியே...
நாம் தள்ளி நின்றாலும்
நம் அன்பு – அது

“கொள்ளை அழகு”...!!!


என்னை அலங்கரிக்கும் மாலையாய் இல்லாமல் 

என்னை செதுக்கும் சிற்பியாய் 

வருவாயோ தோழி...

இப்படிக்கு – புண்பட்ட மனம்...!!!


நான் வாழாத போதும்
வாழ்கின்ற உன்னை வாழ்த்தி வருவேன்....
உயிர் போகாத தருணம் 
சில நொடி என்றாலும் –
உன்னை மறக்காமல் நினைத்து இருப்பேன்...!!!
புயல் வந்து அடித்து செல்லாத இந்த உடல்
உன் குரல் கேட்காமல் செல்லரித்து போகின்றது...!!!
வயது ஆகின்றது ஒவ்வொரு வருடமும் 
நீ என்னை பிரிந்த அந்த நாளுக்கு..
விழியோடு நின்ற வலி இன்று –
இதயத்தோடு புல்லாங்குழல் வாசிக்கின்றது..!!!
இந்த இசை முடியும் நேரம்
உன் இதழ் பிரிந்து வரும் என் பெயராகும் எனில்
இப்போதே முடித்துக்கொள்கிறேன் 

என் இதயத்தின் இசையை...!!!


விட்டுச் சென்ற இதயத்தை விட
 தட்டிக் குடுக்கும் கைகளைப் பார்...!!!


முழு நிலவே 

என்னை மறந்தாய் –

காதல் நினைவாய்

  கண்ணீரை தந்தாய்...!!!


சூரியன்...!!!

போர்த்திய போர்வை விலகிச் செல்ல 
சட்டென்று என்னை பார்த்து 
கண் சிமிட்டினாய்...
அதிர்ந்த என் மனம் 
அமைதி அடையும் முன் 
முழு சிரிப்பையும் கொட்டினாய்...
சிதறிய சிரிப்பு அலைகளை நான் 
சேர்க்கும் முன் மீண்டும்
போர்வைக்குள் சென்றாய்...
வெட்கம் கலைந்து நீ 
என்னை பார்க்கும்பொழுது 

நேரமோ காலை 7 மணி...!!!


மழை....!!!

இதுவரை கண்டதில்லை இப்படி அவளை....

கறுத்து நின்ற அவனை அணைத்து சென்றால் அவள்....

மெல்லிய ஓட்டத்தில் சிறிது களைத்து நின்றான் அவன்....

சட்டென்று தன்னுள் இழுத்து ரகசியம் கூறினால் அவள்....

என்னவோ புரிந்துபோக குலுங்கி சிரித்தான் அவன்....

அந்த சிரிப்பு மழை - இவர்கள் காதலின் விதை....!!!

(அவன்-கார்மேகம்,அவள்-தென்றல்)


உன் எண்ணங்களின் சொந்தமாக 
உன் கன்னங்களில் வழியும் இரு சொட்டு கண்ணீரில் 
- கண்டேன் எனக்கான 
உன் இதய மொழி.....!
நீ என்ற உன்னை எனக்கு சொந்தமாகிய பிறகு 
நீ கண்ணீர் சிந்தும் உரிமை பெற்றது எங்கு.....?!!
நாம் என்னும் இதயக்காதல் நம்மோடு சேர்ந்து அழுவது நியாயமா....??!!!
பிரிவு வரவவில்லையடி நமக்கு சிறு இடைவெளி மட்டுமே - பூமிக்கும் வானுக்கும் உண்டான சிறு இடைவெளி....!
இதற்கு காரணமான அவன் வருவான் உன்னிடம் 
தெளிவாய் இரு....!
அவனை எதிர்கொண்டு வா நாம் மீண்டும் இணைவோம்....!

அவன் பெயர் மரணம்.....!!!
ஒரு முறை திருடினாய் என்னை.....
பல முறை களவு போகிறேன் உன்னிடம்.....!


இறுதி சந்திப்பு.....!

உனக்கும் எனக்குமான பிரிவில்,
ஒரு நடைபாதை வழியே என் மனம் செத்துகொண்டிருக்க 
நீ முன்னாடி நடந்து சென்றாய்.....!
உன் பின்னாடி வந்த பொழுதும் 
கடையில் தொங்கிக்கொண்டிருந்த 
உனக்கு பிடித்த அந்த பொம்மை
என் கையில்....!
இறுதி அன்பளிப்பாக அந்த பொம்மை 
பங்கெடுக்க - உன் முகத்தில் இருந்தது 
புன்னகை....!
தவறி விழுந்த பேனாவை எடுப்பதாக - என்
காலில் விழுந்து வணங்கினாய் - செய்த பிழையை 
சரி செய்யவா...?
இல்லை.....
செய்யப்போகும் பிழைக்கு முன்னாடியே செய்யும் பரிகாரமா.....???!!!!!
உன் வீட்டை அடைந்ததும் படிகளில் நின்று 
அழுத என்னை பார்த்து சிரித்தது உன் உள்ளமா இல்லை இதழா....???!!!!!
நீ வென்றுவிட்டாய் என சிரித்தாயோ - இல்லை
நான் உன் சிரித்த முகத்தை மட்டும் ஞாபகத்தில் வைக்க வேண்டும் என்று சிரித்தாயோ.....???!!!!
அன்று முதல் இன்று வரை உன்னை பார்க்கவில்லை....
இனி என்றுமே உன்னை பார்க்க விரும்பவில்லை.....!
கொன்று சென்ற நீ ஏன் என்னை உன்னுடன் கொண்டு செல்லவில்லை.....???!!!!
தினம் அழும் என்னை புரிந்தவர் எவரும் இல்லை....
இனி புரிந்துக்கொள்ளும் ஒரு உறவும் எனக்கு தேவை இல்லை....!!!!
நமக்கான அந்த இறுதி சந்திப்பு கண்களுக்கு மட்டுமே,
இதயத்துக்கு இல்லை....!


பிழை....!

நான் செய்த பிழை உன் சிரிப்பை ரசித்தது.....

நீ செய்த பிழை எனக்கென்றே நீ சிரித்தது.....

நாம் செய்த பிழை காதலித்தது....

கடவுள் செய்த பிழை நம்மை பிரித்தது......!!!


உறுமி........!

ராயரின் உறுமலில் 
இவள் மிரட்சியில் 
புரட்சியாளனாய் வந்தவன் 
இன்னொரு ராயர்......!
கொடுத்துச் சென்ற 
உருவம் சிறிது என்றாலும் 
விதைத்துச் சென்ற 
கர்வம் பெரிது.......!
உருவம் தாய் 
கொடுத்தாலும்,
உணர்ச்சி தந்தை 
கொடுத்தான்......!
வாள் கூர்மை மட்டும் அல்ல,
இவன் கர்வமும் கூர்மை தான்....!
விட்டுச் சென்றது
பலவீனத்தை அல்ல,
முழு ஆள் பலம் மட்டுமே....!
பலம் வளர்ந்து பாலமானது
தன் சந்ததியர்க்கு 
தாய் மண்ணை பாதுகாக்க...!
தாய் பாலூட்டும் பெண் அல்ல,
வீரம் செழிப்பூட்டும் அரக்கால் ஆயிஷா.....!

வாசகொடகாமா இந்திய நாட்டிற்கு 
வழி மட்டும் கண்டுபிடிக்க வில்லை...
இந்திய மண்ணின் மற்றும் ஒரு வீர குலத்தை
கண்டுபிடிதவனும் தான்...!
குறு மிளகிற்கு வந்தவன் 
கூர் வாள் குத்தி இறந்தான்.....!

உறுமி எத்தனையோ குடுமிகளை 
அவிழ்த்து எரிந்தது மட்டும் இல்ல....

இந்திய மண்ணின் உறுதியையும் 
விழைத்து சென்றது......!


கல்லறையில் ஒரு கடிதம்.....!

நின்று நிதானித்து சொல்ல முடியவில்லை...
அவள் அன்பை.....!
பேசி தீர்க்க முடியவில்லை....
அவள் அழகை.....!
விலகி பார்க்க முடியவில்லை...
அவள் நட்பை.....!
தேடி தொலைக்க முடியவில்லை....
அவள் சிரிப்பை....!
வாழ்ந்து முடிக்க விருப்பமில்லை 
அவளுடன்
வாழ்ந்து கொண்டே இருக்க விருப்பம்....!
கொஞ்சும் அழகு
கெஞ்சும் குழந்தை
மிரட்சி
பயம்
அழுகை
ஸ்பரிஷம்
நெருக்கம்
சுவாசம்
சீண்டல்
கிண்டல்
வாக்குவாதம்
அடி
உதை
கடி 
சின்ன பார்வை
பெரிய கோபம்
உளறல்
தேடல்
பொறுப்பு
சண்டை
செல்ல பெயர் - வேண்டும் மீண்டும்.....!

பிறப்பேனா மீண்டும் ஒருமுறை அவள்
காதலனாக அல்ல கணவனாக....!

(கணவன் நிரந்திரம்,காதலன் இறந்த காலம்)


நினைத்து கொண்டேன் அவள் நிஜமென்று......!

பார்த்தாள்
சிரித்தாள்
மறைந்துக்கொண்டு பார்த்தேன் 
எங்கேயோ பார்த்தாள்....
கண்கள் பளபளக்க 
அவளை ரசித்தேன்
புதிதாக இருந்தாள்.....
கருமை நிற விழிகள்
வில் போன்ற புருவம் 
செம்பருத்தி காம்பு நாசி 
சிறிய இதழ் கொண்டு
வாழைத்தண்டு கழுத்து
அளவான மேடு பள்ளம்
மெல்லிய இடை 
பெரிய ஆனால் அழகிய விரல்கள்
நின்ற அழகில் எவரும் கவரும் தோற்றம்
கருஞ்சிவப்பு சேலை 
அவள் உடலை இன்னும் அலங்கரித்தது....
நிதானமான ஆனால் துல்லிய வேலைப்பாடு
கரும்பச்சை நிற ஜரிகை
தங்க கோடுகளும் அலங்கரிப்பும்
பிரமாதம்.....
அவள் இடையில் மடிப்பு இல்லை
ஆனால்,
அவள் உடையில் அடுத்தடுத்து இருந்த மடிப்புகள்
நம்மை இன்னும் அடிமைப்படுத்தியது.....
கால் விரல்கள் தெரியவில்லை
புடவை மறைத்துவிட்டது
கொஞ்சம் ஏமாற்றம் தான்.....
திட்டினேன் மனதிற்குள்
புடவை கட்டிவிட்ட துணிக்கடை பையனை....!


அழுகின்ற இதய குழந்தைக்கு 
எப்படி புரியவைப்பது....?

அன்னையாம் அவள் இன்று 
இன்னொரு குழந்தைக்கு என்று....!!!?????


அலைகள்.....!

எதுவோ சொல்வதற்கு 
அடிக்கடி வந்து போகிறாய்....
நீ சொல்லாமலே நான் புரிந்துக்கொண்டேன்...
யாருக்காகவோ நீ ஏங்கி தவிக்கிறாய் என்று.....!


அணு அளவும் அவளை அணிந்துக்கொண்டேன் 
என் இதய மேற்பரப்பில்...!
என் இதய துடிப்பின் அதிர்வுகள்
அவளின் மூச்சு காற்றின் வேகத்தில் அடங்கின.....
நெஞ்சோடு அணைத்து வைத்த அவளை
சில வஞ்சக வார்த்தைகள் அள்ளிச் சென்றது....
என் இதயம் அவள் இல்லாமல்
அதிரத்தான் செய்கிறது....

இந்த இதய அதிர்வு நிற்க
என்ன செய்யலாம்.....???


சரி-பிழை....!

எனக்கென்றே வந்தாள்
பிழையாக்கிச் சென்றாள்...
சந்தம் இல்லாத பாட்டு 
என் சொந்தம் ஆனது...
சதி என்னும் இரண்டெழுத்து 
கவிதை என் விதி ஆயிற்று...
தள்ளாடி நிற்கும் அடி நெஞ்சம்
அவள் வடு கண்டு அமைதி ஆனது...
அவளை நினைக்கையில் - 
விட்டு விட்டு போகும் உயிர்
என்று பிரியுமோ அன்று வருகிறேன் மீண்டும் சரியாக....!!!
முதல் முறை வந்தால் அது காதல்... 
மறுமுறை வந்தால் அது 
ஏமாற்றத்தின் வெறி... 
பைத்தியகாரனின் பேத்தல்... 
மீண்டும் புதைகுழி தேடல்... 
மொத்தத்தில் வெற்று அறை கூரையின் சிறு வெளிச்சம்....!!!
கடல் அளவு அவள் அன்பு
மூழ்கவில்லை அதில்
கரை 'ஒதுக்கப்பட்டேன்"....!
வெறுமை சிந்திக்க வைக்கும்... 
அதோடு பல முடிவுகளை எடுக்க வைக்கும்... 
உலகத்தை வெறுக்க வைக்கும்... 
சில நேரங்களில்l உறவுகளையும் வெறுக்க வைக்கும்... 
அள்ளி தந்த வானம் கூட இன்று கை விரித்து காட்டும்... 
ஆனால் உள்ளம் மட்டும் மீண்டும் அவளை நினைக்கும்போது சிரி என்று சொல்லிச் சொல்லிக் காட்டும்...!!!


மரணம்....!

காற்றுக்குத் தெரிந்து தான் 
என்னிடம் வரவில்லை
அவள் இல்லை என்றால் 
எனக்கு சுவாசிக்க பிடிக்காது என்று....!
சிதைந்த உயிர்த்துளியின் 
சிறிது ஈரம் மிஞ்சி இருக்குமானால்
அது மீண்டும் 
அவளை நோக்கிச் செல்லும் ஆவியாக......!!!!


கண்ணிரண்டு கண்டேன்....!!!

எட்டிப்பார்க்கும் எண்ணம் இல்லாமல்
அவளை முட்டி நிற்க்கும் இதயமே.....
சற்று முன் தெரிந்த 
ஜன்னல் வழி அவள் பிம்பம்....
கருமை நிற கூந்தல் 
அலை அலையாக.....
அவள் பேசுகையில் 
கை விரல்கள் தானாகவே நடனம் ஆட....
இதோ இப்போ திரும்பி பார்ப்பாள்
என்று ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்....
முகம் காண ஏக்கம்
அவள் இதழ் காணாமல் இல்லை தூக்கம்....
இடையிடையே அசைந்ந்த அவள் இடை
அடடா எனக்கென்று ஏன் இந்த தடை.....
இதோ வராது இருந்த
மழையும் வந்துவிட்டது.....
சாரல் அவள் கன்னத்தில் பட்டிருக்க வேண்டும் 
கொஞ்சம் தள்ளி செல்கிறாள்
என்னையும் விட்டு.....
கை விரல்கள் எட்டிப்பார்த்தது 
மழைத்துளிகளை கொஞ்சம் தொட்டுப்பார்த்தது
மழைக்கு அதிர்ஷ்டம் இன்று.....
இதோ மூடப்படுகின்றன
கதவுகள்....
திறந்தது அவள் இதயம்
கண்டேன் அவள் கண்கள் இரண்டை.....!!!!


அவளை தவறென்று 
சொல்ல முடியவில்லை....

சரி என்று
ஒத்துக்கொள்ளவும் வழி இல்லை....

உண்மையை ஏற்றுக்கொள்ளும் 
வலிமை என் மனதிற்கு இல்லை.....

ஏற்றுக்கொண்ட தனிமை மட்டும்
என்னை விட்டுச் செல்லவில்லை....

பெருக்கெடுக்கும் கண்ணீர் மட்டும்
ஓசை இல்லாமல்....

ஒவ்வொரு இரவும்
என்னைக் கொண்டுச்செல்வது பாலைவனத்தில்....

அங்கும் கண்டேன் 
அவள் பிம்பமாம் கானல் நீரை கனவில்....

இன்றைய இரவு 
அடுத்த பொழுது பிறப்பதற்காக....

இதை தவிர வேறு ஏதும் 
இல்லை என் வாழ்க்கையில் 
நிரந்தரமாய்.....!!!


என்னோடு வரவில்லை அவள்
தன்னோடு கொண்டு சென்றாள் என்னை.....

ஒருமுறை தான் இந்த காதல்
அதுவும் ஏனோ முறை இல்லாமல் போனதே....

நின்று தான் பார்த்தாள்
ஆனால் நிதானிக்க மறந்தாள்....

வாய்மொழி வந்த வாக்கியங்கள் வெறும் 
காகித தீற்றல்கள் ஆனது....

நீரில்லாத பாலைவனமோ 
நிலவில்லாத நீலவானமோ
நீ இல்லாத நானும் வெறும் சோகமோ.....!

சரியாய் ஓடிய கடிகாரம் சட்டென்று செயல் இழந்தது...
அவளை பிரிந்த இதயமோ செய்வதறியாது வேர்த்து நிற்கின்றது....

நூறு ஜென்மமே எனக்குத் தேவை இல்லையே
வேறு காதலும் எனக்குத் தோன்றவில்லையே...
ஆழம் தெரியாமல் காலை மட்டும் இல்லை 
காதலையும் வைக்காதே...
நீ மூழ்கமாட்டாய்
முறியடிக்கப்படுவாய்...!!!


நீ சுவாசிக்கும் காற்று கூட
என்னை சேரவேண்டாம் என்று நினைத்தாயோ....?

கடல் கடந்த பயணம்....!
விஷம் என்று எதுவும் வேண்டாம் பெண்ணே
உன் ஒற்றை வரி போதும் 
"என்னை மறந்துவிடு மன்னித்துவிடு.....!"
மன்னிக்க பிறந்தவன் மனிதன்
மண்ணோடு மண்ணாகிப் போகிறவன் காதலன்......!


பெட்டியில் பொக்கிஷம்....!

உன் வெட்டி வைத்த அரை நிலவு நகம் கூட 
சொல்லுமடி நீ என்னை வெட்டி விட்டு சென்ற சோகத்தை....!


நீ யாரோடு சென்றாலும் 
நான் யாரோ என்று ஆவேனோ....?
விழியோடு நீ பேசிய மொழிகள்
வலியோடு கண்ணீராகுமோ....?
சேர்ந்தே நடந்தோம்
சேர்ந்தே சிரித்தோம்
சேர்ந்தே அழுதோம்
சேர்ந்தே வாழ்ந்தோம்
யாரோடும் நான் சேர்வது பிடிக்காத நீ
இன்று எத்தனை உறவுகளை சேர்த்துவிட்டாய் எனக்காக....
சோகம்
தனிமை
அழுகை
மௌனம்
வெறுப்பு
இருட்டு
தோல்வி.....!!!!!!!
இடைவேளை 
இல்லா வேளையில் 
அவள் இல்லாத பொழுது 
என் வேலைகள்
தடைபடுகிறது
இடைவேளையைத் தேடி.........!


காதல் அது வேதம்
காயத்தோடு வாழும்
கொல்லுதே என்னைக் கொல்லுதே 
மனம் தேயுதே.....
கண்கள் அது தேடும் 
பாசத்தோடு நாளும்
ஏங்குதே தினம் ஏங்குதே
காலம் போகுதே.....
வா தென்றலே
இங்கு வா தென்றலே....
கண்ணீர் உண்டு
சோகம் உண்டு
ஏக்கம் உண்டு
தூக்கம் மட்டும் இல்லை
கொஞ்சம் வருடிச் செல்ல.....!
அழகே அவளாய்
அவளே அழகாய்
அன்பே உருவாய்
உள்ளமே அன்பாய்
எல்லாம் எதற்கு
எனக்கு இல்லாமல்
வீணடிப்பதற்கு.....!
அன்புக்கு நான் அடிமை
அவளோ அலட்சியத்துக்கு அடிமை.....!
நான் செய்த பிழை
உன்னை நேசித்தது
அளவாய் இல்லாமல்
அளவே இல்லாமல்
அன்பே நிரந்திரமாய்
நான் இங்கு....
அடியோடு வெறுத்து
நீ அங்கு.....!


அவளும் நானும் 
அகமும் புறமும் 
அறிந்தும் அறியாமலும் 
அமைதியும் அவசரமும் 
அழகும் அருமையும் - அன்று

    விலகியும் விலகாமலும் - இன்று....!


'நான்' ஒரு முட்டாள்.....!!!

கல்லைறை கவிதை "நான்" - அதில்
பெரும் எழுத்துப்பிழை "அவள்"...
நாயகன் "காதல்"
நாயகி "கல்யாணம்"
கதை "சுயநலம்"
முடிவு - "தொடரும்"....!

இயக்கம் "காதலர்கள்"
    பெரும் "மூடர்கள்"......!!!!


இது பகலா
இல்லை இரவா....!
அவள் உறவா-இல்லை
என் பகையா....?
தவரில்லா தேசம் உண்டா...
அங்கே காதலும் உண்டா....?

அலைகள் இல்லா
 மனம் வேண்டும்-அதில்
எனக்கு ஒரு இடம் வேண்டும்...
அவளோடு வாழ வேண்டும்....!

இதயம் தாங்கும் அதிசயம்-என் காதலி
இடையில் தோன்றிய ஒரு வலி-இன்ப வலி....!

என் கண்கள்-சோகங்கள்,
அவளை ஈர்த்திட்ட இரு காந்தங்கள்...!

அவள் மனதில் விரித்திட்ட பாயாய்-நான்
விரிகிறேன் சுருங்கினேன் அவள் நினைவால்...!

புதுவித இருக்கத்திலே நெஞ்சம் 
புரிந்துவிடா தயக்கத்திலே கொஞ்சம் 

காதல் ஒரு பழக்கம்-கெட்ட பழக்கம்....!!!!


வலிக்கின்ற இதயம் வடிக்கின்றது கண்ணீரை...
வடிகட்டியதுபோல் வெறும் வேதனைகள் மட்டும்...
ரத்தமும் சதையுமாய் சில துரோகங்கள்...
ஆங்காங்கே எலும்புக்கூடாய் சில நினைவுகள்...
என்ன இருந்து என்ன, அவை மீண்டும் வரப்போவதும் இல்லை...
நான் மீண்டு வரப்போவதும் இல்லை...
மிச்சமாய் நிற்பது வெறுமை, அத்தோடு ஒற்றை மர நிழலாய் தனிமை...

கண்ணடிக்கு மட்டும் இல்லை சொல்லடிக்கும் தான் சுற்றி போடவேண்டும் தோழமையை...

வெறுத்துச் செல்வதை விட ஒதுங்கி செல்கிறேன்....


தூங்கா விழி
காதல் வலி 
அவள் பிரிவு 
தனிமை உறவு
சில்லிட்ட அவள் நினைவு
சூடான சுவாசம்
அரை நிலவு வெளிச்சம்
-அறை முழுவதும்,
தெளிந்த வானம்
நொடிந்த மனம்
சிலிர்ப்பூட்டும் அவள் சிரிப்பு 
காதோரம் சிணுங்கல்
மென்மையான ஸ்பரிஷம்
எல்லாம் நிஜம்....

அவள் மட்டும் பொய்......!!!


என் குவளை தேநீரும் உனக்கே...
அப்போ உனக்கு...???!!!

உன் இதழ்கள்....
உன் வான் ஆகி
மழை ஆகி
தினம் ஏங்கி
ஒரு மழலையாய் மாறினேன்....
உன் சினம் தாங்கி
குணம் தேடி
கண்களில் குளம் வைத்து
இடைவெளியோடு
மனதில் கொண்ட வலியோடு
உன்னை நேசிக்கிறேன் அதை விட அதிகமாய் வெறுக்கிறேன்
உன் முகம் காண துடிக்கிறேன் அதைவிட அதிகமாய் தவிர்க்கிறேன்....

இறுதி சந்திப்பு இனிதாய் இல்லை
   உன்னை சந்திப்பது இனி இல்லை...!!


மோதலில் ஆரம்பித்த நட்பு
பகிர்தலில் தொடர்து
புரிதலில் சிலிர்த்து
அறிந்தோம் நமக்குண்டான அன்பை....
மீண்டும் சண்டை வருமா
என்று ஏங்கி சோர்ந்துபோனோம்...
சண்டை வந்தது
விட்டுக்கொடுக்கும் குணமும் வந்தது
சந்தோசித்தோம்....
உன் வரவை நானும்
என் வரவை நீயும் எதிர்பார்த்து
தினம் ஏங்கினோம்....
இரவு உணவு
வெளியில் நிலவு
என்று "நிலா சோறு" சாப்பிட்டோம்....
கண் அயரும் வேளையில்
மிஞ்சிய சில கதைகளை பேசினோம்
உன்னையும் என்னையும் அறியாமல்
உறங்கியும் போனோம்....
காலை நேரம் செல்ல சிணுங்களில்
நேரம் கடந்தது...
உன் அவசர கோலங்களில்
என்னை மறந்து நான் சிரிக்கும்போது
மறக்காமல் என்னை இடித்து செல்வாய்....
அலுவலகம் வந்தும்
நாம் இணைந்து இருந்தது
அலைபேசியில்....
தொடர்ந்து வந்தது
நமது குறுந்தகவல்கள்.....
தங்கம் என்பாய்
செல்லம் என்பேன்....
விஷயம் இருக்காது ஆனால்
பாசம் இருக்கும்....
தவறாமல் கேட்பாய்
சாப்பிட்டாயா என்று....
மாலை நேரம்
மெதுவாய் வரும்
உன்னை பார்க்க மனமோ வேகமாய் ஓடும்....
வாசல் வந்ததும் அழைப்பாணை அழுத்தும் முன்பே
எத்தனை நாள் கதவு திறந்திருப்பாய்....????
எப்படி தெரியும் நான் வந்துவிட்டேன் என்று கேட்டால்
மறுக்காமல் சொல்வாய் அது அப்படி தான் என்று.....
அன்னையாய் மாறி
என்னை அன்பால் உபசரிப்பாயே
எத்தனை கோடி புண்ணியம் செய்தேனோ....!
மீண்டும்
இரவு உணவு
வெளியில் நிலவு
என்று "நிலா சோறு" சாப்பிட்டோம்....!
இதில் எது உனக்குக் கசந்தது
ஏன் என்னை விட்டு பிரிந்தாய்....???!!!
விடை மட்டும் சொல்லிச் செல்லடி
தடை ஏதும் கூறமாட்டேன்....!!!!!!!!!!!









எண்ணத்தில் கொண்டு செல்லவில்லை....
ஆயினும் எண்ணினேன் உன் தவிப்பை...
ரசிக்கவில்லை ஆனால் சிரித்தேன்...
பிடிக்கவில்லை ஆனால் படித்தேன்-உன் மனதை
கை விரல்கள் கேட்டாய்... தரவில்லை...
அன்பை கேட்டாய்.... தரவில்லை...
பார்த்தால் போதும் என்றாய்... மாட்டேன் என்றேன்
எதற்கும் முடியாது என்றே கூறினேன்...

ஆனாலும் சிரித்துக்கொண்டே கூறினாய்...
உன் முடியாது என்னும் சொல் இல்லாமல் என்னால் முடியாது என்று....


மூடி வைத்த நெஞ்சிலே 
ஏக்கம் ஏனோ எட்டி பார்க்குதே...
இது என்ன நோயா...
கவிதை பேசும் பொய்யா...
நீ இல்லா வானில் - இனி 
தூறல் போடுமா
தீயில்லை ஆனால் சுடுகின்றதே 
உன் பார்வையில்...
"கண்கள் பேசும் காதல் பலமுறை
இதயம் பேசும் காதல் ஒருமுறை"...!!!
எதற்கோ யாருக்கோ....!!!

புயல் கடலின் உள்ளே
நீரோ கரையைத் தாண்டி....
அவள் என் மனதின் உள்ளே
நிம்மதி விண்ணையும் தாண்டி...
அழகே உருவாய் தோன்றிய நிலவே...
கனிவாய் கையில் ஏந்தி என்னை எறிந்தவளே....
சிரிப்பால் சிதைத்து
கண்ணுக்குள் சென்ற நுன்னுயிரே...
இதயம் சிரிக்கும்
உன்னை தன்னுள் புதைக்கும்
அதற்கும் வலிக்கும்... ஆம் வலிக்கும்...!!!!